ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக்கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த குத்தகை ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பினார்.
கச்சத்தீவு
ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத்தியமாக இருந்து வந்துள்ளது. இந்த தீவு பகுதி கடல்வளம் நிறைந்த பகுதியாகும். இந்த கடல் பகுதியைச் சுற்றிலும் அபூர்வ சங்குகள் கிடைக்கின்றன. கச்சத்தீவு தரைப்பரப்பில் சாய வேர்கள், மருந்து செடிகள் கிடைக்கின்றன. அதோடு எண்ணெய் வளம் நிறைந்த பகுதியாகவும் இது உள்ளது.
குத்தகை
இந்த கடல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் 25-7-1880 அன்று ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி பிள்ளை, அப்துல்காதர் மரைக்காயர் ஆகியோருக்கு ரூ.700-க்கு 5 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர்.
இதுதவிர 1914-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை பாம்பனைச் சேர்ந்த முகமது மீரா சாஹிபு மரைக்காயருக்கு ராமநாதபுர சமஸ்தான திவான் சுப்பையா நாயுடு 15 வருட குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்த குத்தகை ஒப்பந்த ஆவண நகல்களை, ராமநாதபுரம் மன்னர் சண்முகராஜேசுவர சேதுபதியின் மகன் வழி பேரன் குமரன் சேதுபதி, ’மேற்படி கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment